யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள காணியை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுத்தம் செய்ய முற்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தமது காணியும் இருப்பதாக தெரிவித்து சிலர் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
குறித்த காணி எல்லை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் உறவினரான இளைஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அர்ச்சுனா எம்.பி. அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது சட்டத்தரணி கௌசல்யாவும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை காணொளியும் பதிவு செய்துள்ளார்.
பின்னர் அர்ச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை இன்று முற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


Recent Comments