கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை வழிநடத்திய பிரதான சந்தேக நபரான தேரரை , எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த தேரர் என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் 22 தேரர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் தலைமறைவாகியிருந்தார். அங்கு வைத்து நேற்று (26) அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அமிதானந்த என்ற இந்த தேரரின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் கைது செய்யப்படும் வேளையில் போதைப் பொருள் உட்கொண்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Recent Comments