வீதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக இரைச்சல் எழுப்பும் வாகனங்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய மேலதிக உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.
வீதிகளில் உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதை முன்னிலைப்படுத்தி பொலிஸாரினால் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொது வீதிகளில் பயணிக்கும் சில வாகனங்கள் அபாயகரமான முறையில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் முறையான தகுதிச் சான்றிதழ்கள் இன்றி பழைய வாகனங்களை வீதியில் செலுத்துவது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட சைலன்சர்களின் (புகை வெளியேற்றும் கருவி) ஒலியை மாற்றுதல், அதிகமாக ஒலி எழுப்பல் மற்றும் ஆபத்தான பல்வேறு உதிரிப் பாகங்களை இணைத்து வாகனங்களை நவீனமயப்படுத்துதல் என்பன மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத மேலதிக மின் விளக்குகள், ஒளிரும் வர்ண விளக்குகள், பல்வேறு ஒலிகளை எழுப்பும் ஹார்ன்கள், வாகனத்தின் வர்ணத்தை மாற்றுதல் மற்றும் வாகனங்களின் உடல் பகுதிகளில் சித்திரங்களை காட்சிப்படுத்துதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.
அண்மைக்கால விபத்துக்களின் போது முறையான வாகன நிலை அறிக்கை இன்றி நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்துகள் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை சூழலுக்கு கறுப்புப் புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் 070 – 3500525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகன உரிமையாளர்கள் சட்டவிதிமுறைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளளனர்.


Recent Comments