அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியான ஒரு விசேட அபிவிருத்தி நிதியத்தை தாபிக்க வேண்டும் என்கின்ற கெளரவ பாராழுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பிரேரணையினை தாம் வரவேற்று வழிமொழிவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (07.08.2026) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டுவரப்பட்ட பிராந்திய அபிவிருத்திக்காக புதிய நிதியங்களை உருவாக்க கோரல் தொடர்பிலான பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த விடயம் மிகவும் முக்கியமானது. கடந்த காலத்தில் , மாகாண சபையில் இதேபோன்ற ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்தபோது, அன்றைய அரசாங்கம், மாகாண சபைக்கு அவ்வாறானதொரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் இல்லை என்ற கட்டுப்பாட்டை விதித்தது.
அப்போது, அதனை முதலமைச்சர் நிதியமாக மாகாண சபையின் ஊடாகக் கொண்டு வருவதற்கும் நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அந்த முயற்சியும் இறுதிவரை இழுத்தடிக்கப்பட்டு, அந்த முதலமைச்சர் நிதியம் முடக்கப்பட்டது.
ஆகவே, கெளரவ சாணக்கியன் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த விசேட அபிவிருத்தி நிதியம், முழு நாட்டிற்கும் அல்லாவிட்டாலும், அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான ஒரு நிதியத்தை உருவாக்குவது என்ற வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

உங்களுக்கு தெரியும், கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.
யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், எமது மாகாணங்களான வடக்கு, கிழக்கு மட்டுமன்றி மொனராகலை, நுவரெலியா போன்ற பகுதிகளிலும் கூட அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க பின்னடைவு தொடர்கிறது.
இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) எடுத்துப் பார்த்தால், வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு சுமார் 4 வீதமாகவே உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் GDP பங்களிப்பை ஒன்றாக எடுத்துப் பார்த்தாலும், அது கிட்டத்தட்ட 9 வீதமாகத்தான் காணப்படுகிறது.
ஆனால், தென்பகுதியில் மாகாணமொன்றின் பங்களிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தி, அவற்றின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான நிதியமைப்புகள் அவசியமாகின்றன.
அந்த வகையில், கெளரவ சாணக்கியன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி நிதியம், பிராந்தியங்களுக்கு இடையிலான அபிவிருத்தி இடைவெளியை குறைப்பதற்கும், பின்தங்கியுள்ள பகுதிகளுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமையும்.
, அந்த நிதியத்தின் மூலமாக அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களையும் மாகாணங்களையும் ஏனைய மாகாணங்களுக்கு சமமான நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படும்.
அந்த வகையில், எமது மாகாணங்களை எடுத்துப் பார்க்கும்போது, யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அழிவடைந்த பல தொழிற்சாலைகள் இன்றுவரை மீள இயங்காத நிலை காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து பதினேழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையிலும் கூட, அழிவடைந்த அந்தத் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
ஆகவே, எமது பிரதேசங்கள், குறிப்பாக ஏற்கனவே அவர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ள பிரதேசங்கள், அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.
இந்த நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி நிதியமும், அவருடைய பிரேரணையும், இந்த நாட்டின் அனைத்து மக்களும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகளுடன் சமத்துவமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாகும் என நான் கருதுகின்றேன்.
எனவே, இந்தப் பிரேரணையை நான் முழுமையாக வரவேற்று, ஆதரித்து, வழிமொழிகின்றேன் என தெரிவித்தார்.


Recent Comments