தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 40,000 ரூபாய் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) திங்கட்கிழமை அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த அலுவலர் அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் அலுவலராவார்.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் குறித்த உத்தியோகத்தர் பணத்தை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அவரை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடகிழக்கின் பல்வேறு அலுவலகங்களில் கடமை புரியும் இத்தகைய தொழிநுட்ப அலுவலர்களால் இலஞ்சம், ஊழல், தரமற்ற கட்டுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்களை வழங்குகின்ற போதும் குறிப்பாக வடக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதுவித கண்காணிப்பையோ, நடவடிக்கைகளையோ மேற்கொள்வதில்லை எனப் பலரும் குற்றம் சுமத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments