Monday, August 24, 2026
Huisதாயகம்உயர் அதிகாரிகளின் எரிபொருள் மற்றும் வாகனப் பயன்பாட்டில் பெரும் முறைகேடுகள் அம்பலம்..!

உயர் அதிகாரிகளின் எரிபொருள் மற்றும் வாகனப் பயன்பாட்டில் பெரும் முறைகேடுகள் அம்பலம்..!

இலங்கை பாராளுமன்றத்தின் 8 மற்றும் 9 ஆவது கூட்டத் தொடர் காலத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய உயர் அதிகாரிகளின் எரிபொருள் மற்றும் வாகனப் பயன்பாட்டில் பெரும் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக விசேட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அலுவலகத்திற்கான எரிபொருள் நுகர்வுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படாததால், 2023 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 3,994 லீட்டரும் (66% அதிகரிப்பு), 2024 ஆம் ஆண்டில் 6,122 லீட்டரும் (155% அதிகரிப்பு) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சபாநாயகர் அலுவலகத்தின் வருடாந்த எரிபொருள் செலவு 2023 இல் 19.37 மில்லியன் ரூபாவாகவும், 2024 இல் 26.05 மில்லியன் ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

அதேபோன்று, பிரதி சபாநாயகருக்கு அனுமதிக்கப்பட்ட மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களைத் தவிர்த்து, மேலதிகமாக வழங்கப்பட்ட தனியார் வாகனம் ஒன்றுக்காக 8.55 மில்லியன் ரூபா பெறுமதியான 21,299 லீட்டர் எரிபொருள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவரது உத்தியோகபூர்வ வாகனங்களும் அவற்றுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறி 2023 இல் 6,980 லீட்டரும், 2024 இல் 1,515 லீட்டரும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குழுக்களின் தவிசாளர் பதவிக்கான வாகன மற்றும் எரிபொருள் உரிமைகள் உத்தியோகபூர்வமாக வரையறுக்கப்படாத நிலையிலும், அவருக்கு மூன்று வாகனங்களும் வரம்பற்ற எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் 2022 மற்றும் 2023 காலப் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன், 2022 முதல் 2024 வரை 6.07 மில்லியன் ரூபா பெறுமதியான 15,063 லீட்டர் எரிபொருளைப் நுகர்ந்துள்ளார்.

இது அரச சேவையில் மிக உயர்ந்த எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறும் அமைச்சின் செயலாளர் ஒருவரின் வருடாந்த எல்லையை விட ஆண்டுக்கு சுமார் 2,300 லீட்டர் அதிகமாகும் எனத் தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!