தொடர் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தேடப்படும் நபர்களைக் கண்டறிந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) கோரிக்கைக்கு இணங்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் (INTERPOL) அமைப்பு நீல அறிக்கை ஒன்றை (Blue Notice) வெளியிட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்காணிக்க சர்வதேச சட்ட அமுலாக்க வழிமுறைகளைப் அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் விஜேபால குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்ச தற்போது இலங்கையில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வருவதுடன், பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார். மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம், மாத்தறை – எலியகந்த சாலை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடான முறையில் வாங்கியதாகக் கூறப்படும் வழக்குடன் தொடர்புடைய விசாரணைக்கு ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்தது.
பசில் ராஜபக்ச தொடர்பாக நீல அறிக்கை ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளதாகவும், இது தொடர்புடைய குற்றவியல் விசாரணைகள் தொடர்பில் அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெற சர்வதேச சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இது வழிவகுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இவ் வழக்கானது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டதுடன், இதில் வேறு பல நபர்களும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். பசில் ராஜபக்ச வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர்கள் இதற்கு முன்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவர் தொடர்ச்சியாக ஆஜராகமைக்குரிய காரணங்களைக் பரிசீலித்த நீதிமன்றம், பிடியாணையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.
ஒரு குற்றவியல் விசாரணை தொடர்பில் நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த மேலதிகத் தகவல்களைச் சேகரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினரால் பயன்படுத்தப்படும் சர்வதேச எச்சரிக்கையே இன்டர்போல் நீல அறிக்கை ஆகும்.
பயன்படுத்தப்படும் சர்வதேச வழிமுறைகளைத் தெளிவுபடுத்திய அமைச்சர், நீல அறிக்கைக்கும் சிவப்பு அறிக்கைக்கும் (Red Notice) இடையிலான தொழில்நுட்ப வேறுாடுகளை விளக்கினார்.
சந்தேகநபரின் வெளிநாட்டு முகவரி அல்லது வசிக்கும் நாடு துல்லியமாகத் தெரிந்தால் நீல அறிக்கை வெளியிடப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் தனது சொந்த நாட்டிற்குத் தேவைப்படுகிறார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இது அமைகிறது என்றும் அவர் கூறினார்.
மாறாக, இருக்கும் இடம் முழுமையாகத் தெரியாத தலைமறைவான நபர்களுக்குச் சிவப்பு அறிக்கை கோரப்படுகிறது. இலங்கையின் இன்டர்போல் கிளை நேரடியாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) ஊடாகவே இயங்குகிறது. இது சர்வதேச இன்டர்போல் அறிவிப்பு முறைமை வாயிலாக இத்தகைய அறிவிப்புக் கோரிக்கைகளைக் கோரி செயற்படுத்துகிறது.
முந்தைய அரசியல் பதவிகளைப் பொருட்படுத்தாமல், குற்றவியல் மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடைய தேடப்பட்ட நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அவசியமான சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


Recent Comments