Saturday, November 28, 2026
Huisதாயகம்ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை - சந்திரிக்கா விமர்சனம்

ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை – சந்திரிக்கா விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைப் பாராட்டிய அதேவேளை, இந்த நடவடிக்கையைத் தாண்டி அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் ஏதுமில்லை என்றும், இது வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் ‘சமத்துவ முன்னெடுப்பு’ (Equality Initiative) அமைப்பின் ‘வோர்டெக்ஸ்’ (VORTEX) ஐந்தாவது தொகுதியை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை “சிறப்பானது” என்று குறிப்பிட்டாலும், அதைத் தவிர அவர்களிடம் வேறு எந்தக் கொள்கையும் இல்லை என்று கூறினார்.

“தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைத் தவிர அவர்களிடம் வேறு கொள்கைகள் இல்லை என்பதுதான் எனது குறை. அந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மிகச் சிறப்பானது, ஆனால் அதைத் தாண்டி வேறொன்றும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு வர்க்கத்திற்கு எதிராக மற்றுமொரு வர்க்கத்தின் மீது வெறுப்பைத் தூண்டுவதைத் தவிர, அரசாங்கத்திடம் வழங்குவதற்கு வேறொன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த குமாரதுங்க, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அவர்களை வலியுறுத்தினார்.

“நீங்களே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உள்ளவர்களோ அல்லது பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளவர்களோ தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என்று காத்திருக்காதீர்கள்” என்று கூறிய அவர், கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கை தனது முழுத் திறனையும் அடையத் தவறியதற்குக் காரணம், நாட்டில் சமத்துவம் இல்லாமையும், ஒரு ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கத் தவறியதுமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நமது நாடு இயற்கை வளங்கள் நிறைந்த ஒன்று; அவற்றில் பல இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற காரணங்களால், நம்மிடம் மிகச் சிறந்த மனித வளங்கள் உள்ளன.

இருப்பினும், தற்போது நாம் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒரு ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கத் தவறியதே இதற்குக் காரணம் என்று நான் கூறுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். முன்னைய நாடாளுமன்றம் ஒன்றில், சுமார் 20 உறுப்பினர்கள் மட்டுமே பட்டதாரிகளாக இருந்தனர் என்றும்,ஏனையரவர்களில் பெரும்பாலானோர் உயர்தரப் பரீட்சையைக் கூட நிறைவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமன்றி, அனைத்துக் குடி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமத்துவம் இல்லாததே இலங்கை உண்மையான மேன்மையை அடைவதைத் தடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!