Wednesday, February 5, 2025
Huisதாயகம்பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீடிக்க அரசு சதியா? எழுந்துள்ள சந்தேகம்..!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீடிக்க அரசு சதியா? எழுந்துள்ள சந்தேகம்..!

அறுகம்பை பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை செய்து வரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, தற்போது இந்த விடயம் தொடர்பாக கூடுதல் தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் அறுகம்பை சுற்றுலாப் பகுதியை குறிவைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று (17) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பாக ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அருகம்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுற்றுலாப் பகுதியின் வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்க ஆட்களை நியமிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாத புலானாய்வு அதிகாரிகள் நேற்று யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ.ஏ.தொன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையில், இந்த பயங்கரவாத சதியின் முதல் சந்தேகநபரான பிலால் அஹமட், 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவா டிப்போவில் பேருந்து மீது குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியதாக சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர, முதலாவது சந்தேக நபரிடமிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அல்லது பொலிஸார் பல ஆவணங்களில் கையொப்பங்களைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது, ​​சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றம் அவர்களைக் கண்காணித்து வருவதாக நீதவான் தெரிவித்தார். சந்தேக நபர்களைக் கண்காணிக்கச் சென்ற போது, அவை குறித்து அவர்கள் ஒருபோதும் முறைப்பாடு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படி, இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!