நாட்டு மக்களின் பேராதரவுடன் அரியணையேறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, எதிரணிகள் மும்முனைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியை ஆட்டம் காண வைக்கும் நோக்கில் எதிரணிகளால் அரசியல் சமர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமது அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது. அந்த வகையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குரிய அடித்தளம் அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள பாதீடு ஊடாக இடப்படவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது மண்கவ்விய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன, இரு தரப்பும் இணைந்து களமிறங்கி இருந்தால் வெற்றி வாகை சூடி இருக்கலாம் என தமக்கு தாமே ஆறுதல் கூறி வருவதுடன், சங்கமத்துக்குரிய சாத்தியப்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் இரு தரப்பு இணைவு பற்றி கொழும்பில் இன்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது. இரு கட்சிகளும் இணைந்து மீண்டும் ஒரு கட்சியாக மாறுவதற்குரிய சாத்தியம் இல்லை என்பதால் பொதுவானதொரு கூட்டணியின்கீழ் இணைவது பற்றியே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டணியின் சின்னம் யானையா, தொலைபேசியா என்பதிலும் குழப்பம் நீடிக்கின்றது.
இந்த இணைவுக்கு சஜித் இழுபறிபோக்கை கடைபிடித்து வந்தாலும் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பலைகளால் கடைசியில் பேச்சுகளை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கியுள்ளார் என்றே கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சஜித், ரணில் அணிகள் இணைந்து கூட்டணியை உருவாக்கினால் அதன்மூலம் திசைக்காட்டியை திணற வைக்கலாம் என அக்கட்சிகளின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அதற்குரிய பலப்பரீட்சையாக உள்ளாட்சி சபைத் தேர்தலை பயன்படுத்தலாம் எனவும் யோசனை முன்வைத்துள்ளனர்.
இரு தரப்பு இணைவுக்கு பின்னர் நிழல் நாடாளுமன்றமொன்றை ஸ்தாபித்து, நிழல் அமைச்சரவையை நியமித்து, அதன் ஊடாக நகர்வுகளை முன்னெடுப்பதற்குரிய திட்டமும் உள்ளது. ரணில், சஜித் கூட்டென்பது அரசுக்கு எதிராக ஒரு முனையில் முன்னெடுக்கப்படும் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சர்வஜன அதிகாரம் தரப்பினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சிங்கள தேசியவாத அமைப்புகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதாவது சிங்கள, பௌத்த வாக்கு வங்கியை குறிவைத்து, வாக்கு வேட்டை நடத்துவதற்குரிய களத்தை உருவாக்குவதற்குரிய வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது.
கடந்த காலங்களைப் போலவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் புலிப்புராணம் பாட ஆரம்பித்துள்ளது. போரை முடிந்த தலைவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், வீட்டை விட்டு வெளியேற்ற சதி என்றெல்லாம் ஒப்பாரி வைத்து, அனுதாப வாக்குகளைப் பெறுவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
எடுத்த எடுப்பிலேயே அல்லாவிட்டாலும் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய முயற்சிகள் எடுக்கும்போது, தலைதூக் குவதற்குரிய தூரநோக்கு திட்டமே மேற்படி தேசிய வாத அமைப்புகளிடம் உள்ளன என்பதை அவற்றின் நகர்வுகளில் இருந்து அறியமுடிகின்றது.
இனவாதம், மதவாதம் மறந்து, புரட்சிகரமானதொரு மாற்றத்துக்காக வாக்களித்த மக்களின் மனங்களில், பிரிவினைவாதத்தை விதைக்கும் வகையில் ஒரு சில ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் உரையாற்றுவதைக் காணமுடிகின்றது.
மூன்றாவதாக இடதுசாரிகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மொட்டு கட்சியின் அதிருப்திக்குழு என்பன ஈடுபட்டு வருகின்றன. முன்னிலை சோசலிசக் கட்சியும், அரசின் திட்டங்களை சரமாரியாக விமர்சித்து வருகின்றது.
தமது கட்டமைப்பின்கீழ் உள்ள தொழிற்சங்கங்கள் ஊடாக சில நகர்வுகளை முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் பற்றியும் அக்கட்சி ஆராய்ந்து வருகின்றது எனலாம். இது முன்றாவது முனை தாக்குதலாக கருதப்படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, வளமான நாடு ,அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரம் காட்டி வருகின்றது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கள்வர்களை பிடிக்கவில்லை, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள சொத்துகளை கொண்டுவரவில்லை என்பதும் அரசுமீது தொடுக்கப்படும் விமர்சனக் கணைகளில் பிரதானமானவையாக உள்ளன.
கள்வர்களை ஒரே இரவில் பிடித்து விடமுடியாது. அதனால்தான் சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பில் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாட்சி, ஆதரமின்றி கைவைத்தால் அரசியல் பழிவாங்கல் என முத்திரை குத்திவிட்டு, குற்றவாளிகள் நாயகர்களாக கூடும்.
கடந்த காலங்களில் அப்படி நடந்தும் உள்ளது. எனவே, காலம் தாமதத்தைவிட, உண்மை மற்றும் நீதி என்பன மிக முக்கியமாகும்.
(தொடரும்…..)
ஆர்.சனத்
Recent Comments