தமிழர் தாயகத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை..!

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம். இதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாரில்லை என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் சூளுரைத்துள்ளது.

மேலும் தமிழர் தாயகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அவ்வாறான சிந்தனையுடன் செயலாற்ற முன்வரவேண்டும் என அனைத்து தமிழ் கட்சிகளிடமும் வேண்டிக் கொள்வதாகவும் கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனையில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் இன்றைய தினம் நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்துக்குருமார்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசியத்தில் பற்றுக் கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கையினை கிழக்கிலங்கை இந்தக்குருமார் ஒன்றியத்தினூடாக முன்வைக்க விரும்புகின்றோம்.

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும், கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்.தற்போது தையிட்டி, திருகோணமலை போன்ற இடங்களில் பௌத்த மயமாக்கலை மூலாதாரமாக கொண்டு பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் தற்போது புதுசு புதுசாக பௌத்த ஆலயங்கள் நிறுவப்படுகின்றன.

இந்த நேரத்தில் தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது நிலப் பிரதேசத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.

ஆகவே தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அதுமட்டுமன்றி, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது, உப்பில்லாக்கஞ்சியை மட்டுமே தமது உணவாக மக்கள் உண்டனர். அதனை மீட்டிப்பார்க்கும் வகையிலும் எதிர்கால சமூகத்திற்கும் இந்த விடயம் தெரியவேண்டும் என்பதற்காகவும் இதனை வருடாந்தம் நாங்கள் நினைவு கூர்ந்து வருகின்றோம்.ஆகவே அனைவரும் இவ்வாறான நிகழ்வுகளில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் முன்வைக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது, கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அலுவலகத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, தென்னை மரத்திற்கு உயிர் நீர்த்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையும், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உப்புக் கஞ்சி காய்ச்சப்பட்டு அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *