உலக ஆசிரியர் தினம் – ஒக்டோபர் 5

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம் என்பர். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. 1994ம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை உலக ஆசிரியர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும் கூட, இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. உலகளாவிய ரீதியாக அக்டோபர் 5ம் தேதியும், இலங்கையில் இது அக்டோபர் 6ம் தேதியும் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினம் என்பது ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெனில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன.

எனவே, ஏனெனில் இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்ப டுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது என்பது இவர்களின் வாதமாகும்.

உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தான், இருக்கிறார், இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.

மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும். இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம்.

ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது.

2023ம் ஆண்டிற்கான உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள், “The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage” என்பதாகும்.

நாமும் எமது ஊடகம் சார்பில் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.