விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவு நிலுவையில் – ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, 2 பில்லியனுக்கும் அதிகமான நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடவிதானங்களின், செயன்முறைப் பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான முழுமையான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை.



இதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடவிதானங்களின், செயன்முறைப் பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளில் ஆசிரியர்கள் பங்கேற்பதில், தாக்கம் ஏற்படுவதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதேநேரம், 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், சாதாரண தரம் , உயர்தரம் மற்றும், புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றின் விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவாக, 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வழங்கப்பட வேண்டியுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.