மன்னாரில் பொலிஸாரை தாக்கியவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்..!

மன்னார், உயிலங்குளம் பகுதியில் குற்றச் செயல் தொடர்பாக பொலிஸார் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்காக வீடு தேடி சென்ற போது அவ்வீட்டிலிருந்த ஆண்கள், பெண்கள் இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட பதில் நீதவான் நேற்று (30) உத்தரவிட்டார்.

கடந்த சனிக்கிழமை (24) மாலை மன்னார் உயிலங்குளம் மதுபானசாலைக்கு அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளனர்.



இதைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விசாரணை செய்ததுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கு நின்றவர்கள் இனம் காட்டியுள்ளனர்.

இதற்கமைய பொலிஸர் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கு அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றிருந்த போது பொலிஸார் மீது அவ் வீட்டிலிருந்தவர்கள் கடுமையாக தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இதனால் பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக் கிழமை (25) மாலை மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி. வினோதன் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த 10 சந்தேக நபர்களையும் நேற்று (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.



இந்த நிலையில் குறித்த 10 சந்தேக நபர்களும் மீண்டும் (30) மன்னார் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.