2024ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளினதும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் சம்பளத்தை அதிகரிக்க இதுவரை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



சுதந்திர மக்கள் காங்கிரஸால் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்திருப்பதாக ஜீ. எல். பீரிஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் காணப்படும் இடைவேளியை சரி செய்ய சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவொரு வழியும் இல்லாத பட்சத்தில், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அனைத்து சேவைகளினதும் கட்டணங்கள் நாளாந்தம் அதிகரிக்கப்படுவதாகவும் இவ்வாறாக கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் பிரச்சனைகளுக்கு தீர்வாக சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் ஜீ. எல். பீரிஸ் கூறியுள்ளார்.



அத்துடன், நாடளாவிய ரீதியில் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான நடைமுறை தீர்வுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்க தமது கட்சி ஆயத்தமாக இருப்பதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் சரியாக வழிகளை பின்பற்ற சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் மாயைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணியல் எனப்படும் டிஜிட்டல் மயப்படுத்தல், பசுமை பொருளாதரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் வெறும் மாயைகள் எனவும் யதார்த்த உலகில் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜீ. எல். பீரிஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.