மக்கள் பயணிக்க முடியாத ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம்..!

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும் போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.



தற்போது பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது.

தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது.

பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.



தற்போது மழையுடன் கூடிய காலமாகையால் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்வதோடு, கனரக வாகனங்களும் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்

பல விபத்துகள் குறித்த பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றது.



ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலையும் காணப்படுவதாகவும், குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படியும் அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்