பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் முறையற்ற வகையில் அனுமதி – ஜோசப் ஸ்டாலின்

கல்வி அமைச்சு கடந்த மூன்று வருடங்களாக 2,367 மாணவர்களை பிரபல பாடசாலைகளில் முறையற்ற வகையில் அனுமதித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப் பகுதியில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையின்படி, குறித்த காலப்பகுதியில் முறையற்ற வகையில் மாணவர்களை அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட கடிதங்களில் 72 வீதமானவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.