வெளிநாட்டுப் பணியாளர்கள் 2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

கனடா செல்லும் மாணவர்களுக்கு அந்த நாடு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களின வருகையை குறைக்கும் வகையில் அடுத்த வருட ஆரம்பத்தில் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கனடாவில் ஏற்பட்டுள்ள வீட்டு வசதி நெருக்கடிக்கு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் வருகையே காரணம் எனவும் மில்லர் கூறியுள்ளார்.

தற்காலிக அடிப்படையில் கனடாவிற்குள் வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனை யாரையும் குறிவைத்து செய்யவில்லை.

சர்வதேச மாணவர்கள் என்ற போர்வையில், விவசாய தொழிலாளர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி வேலை அனுமதி பெற்ற தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கனடாவிற்குள் வருகின்றனர் எனவும் மில்லர் கூறியுள்ளார்.அதேவேளை கனடாவின் மக்கள்தொகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் மக்கள்தொகை 4.3 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக கனடாவின் அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபரங்கள் வெளியாகி ஒரு வாரத்திற்குள் மில்லர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புள்ளிவிபர அறிக்கையின்படி, கனடாவில் தற்போது 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 3.13 லட்சம் புலம்பெயர்ந்த மக்கள்.இதேவேளை, கனேடிய அரசாங்கம் ஏற்கனவே வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கடுமையான முடிவை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களுக்கான வைப்புத் தொகை பெரியளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த தொகை 10 ஆயிரம் டொலர்களாக இருப்பதுடன் அதனை 20 ஆயிரத்து 635 டொலர்களாக கனடா உயர்த்தியுள்ளது. இது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.