மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; 5000 மாணவர்களுக்கு ரணில் முன்னெடுத்துள்ள நடவடிக்கை..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்கல்வியை தொடர்வதற்கு நிதி வசதி இல்லாத மாணவர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.



இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களில் உயர்கல்வியை தொடர முடியாமல் அதற்கான உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக இந்த விசேட கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதில், கல்வி வலயம் ஒன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.



அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக கல்வி வலயமொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.