மொட்டுக்குள் பிளவு – பின்வாங்கிய மகிந்த; பரபரப்படையும் இலங்கை அரசியல்..!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் எந்தவொரு வேட்பாளரும் களமிறங்கப் போவதில்லை என அண்மையில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததையடுத்து, இவ்வாறாக கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தனது கட்சி சார்பில் எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கப்போவதில்லை என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.மேலும், கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்பது பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்களின் விருப்பம் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், இத்தகைய மாற்று கருத்துக்கள் காரணமாக கட்சியினருக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமா எனும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.