நிகழ்நிலை காப்பு சட்டம்; சுமந்திரனின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி..!

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் (Online Safety Bill) சபாநாயகர் கையொப்பமிட்டமையை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த இந்த மனு ப்ரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக சபாநாயகர் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதில் சட்டமா அதிபரும், சபாநாயகரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.



சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு, அதில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளமையினால், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என கடந்த 20 ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்னம் ஐந்து அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.



பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் என்பதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சட்ட அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனும் சட்டமா அதிபரின் தர்க்கத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுவை தள்ளுபடி செய்தது.