வெடுக்குநாறி மலையில் இந்துக்களின் அவலக் குரல்கள்; எல்லை மீறிய பொலிசார்..!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினமான இன்று இரவு நிகழ்வுகளுக்காக கூடியிருந்த பக்தர்கள் மீது பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் சென்றிருந்தனர்.



நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற பக்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இன்று காலையில் இருந்து பொலிசார் மற்றும் இரணுவத்தினர் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டலுடன் குறித்த பகுதிக்குச் சென்று பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.



“தொல்லியல் சட்டத்தின்படி பிற்பகல் 6மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது. ஆறு மணிக்கு பின்னர் நிற்பவர்களைக் கைது செய்வோம்” என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிவராத்திரி நிகழ்வுகள் இரவு முழுவதும் இடம்பெறவிருந்த நிலையில் வழிபாடுகளுக்கு பக்தர்கள் ஆயத்தமாகியிருந்தனர். இந்த நிலையில் அங்கு சென்ற பொலிசார், பக்தர்கள் மேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.



பெண்களின் கழுத்தைப் பிடித்து இழுத்து வீசியதுடன் சுவாமிக்கான படையல் பொருட்களை சப்பாத்துக்கால்களால் உதைந்தெறிந்து அட்டகாசம் செய்ததனால் அங்கு பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.