மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் இன்றாகும்..!

உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதியான இன்று, சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர்.

மகளிர் தினம் எப்போது தொடங்கியது?

சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.

இந்த நாளை சர்வதேச மயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.

1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.இது முதன் முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது. எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 112வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கிய போது அனைத்தும் அதிகார பூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்” என்பதாகும்.

சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது. அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை.

1917இல் ரஷ்ய பெண்கள் “உணவும் அமைதியும்” என்ற பெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும் வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை – அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.