தகவலறியும் உரிமைக்கான சட்டம் மக்களுக்கான ஆயுதம் – சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ

பொதுவாக சொல்வதாயின் தகவலறியும் உரிமை குடிமக்களுக்கான உரிமையாகும். இலங்கையில் தகவலறியும் உரிமையை சட்டமாக்குவதில் ஊடகங்கள் தான் பாரிய பங்களிப்பு செய்ததாக எண்ணமொன்று நிலவுகின்றது. அந்த நோக்கு ஓரளவிற்கு சரியானதே. எனினும் தற்போது நாட்டுமக்களே ஊடகங்களிலும் பார்க்க தகவலறியும் உரிமையை அனுபவித்துவருகின்றனர்.

2017 பெப்ரவரி தகவலறியும் உரிமை சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்ததில் இருந்து ஆணைக்குழுவிற்கு வந்த மேன்முறையீடுகள் இதனை நிரூபிக்கின்றன. அந்த மேன்முறையீடுகளில் பல சாதாரண நாட்டுமக்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எமது நாடு ஒரு தகவல் கலாசாரத்தை நோக்கி, மிக மெதுவாக என்றாலும், சென்று கொண்டிருக்கிறது எனக் கூறமுடியும்.

தகவலறியும் உரிமை சட்டத்தின் வரைவு சட்டம் 2002/2003 காலப்பகுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட போதும் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறவில்லை. அக்காலப்பகுதியிலேயே இச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்குமாயின் தகவலறியும் உரிமை சட்டத்தை தெற்காசியாவில் நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இலங்கை உருவாகியிருக்கும்.



எவ்வாறாயினும் 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இலங்கை தகவலறியும் உரிமை சட்டம் உலகின் சிறந்த தகவலறியும் உரிமை சட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுருக்கமாக கூறுவதாயின் உலகின் மூன்றாவது சிறந்த தகவலறியும் உரிமை சட்டமாக இலங்கை சட்டம் கருதப்படுகிறது. எப்படியாயினும் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள எண்ணக்கருக்களுக்கும் முழுமையான தகவலறியும் கலாசாரத்திற்கும் இடையில் சில வேறுபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அத்தகையன ஆரம்பக் கட்டங்களில் எதிர்பார்க்கப்படுபவைதான். தகவலறியும் உரிமைக்கான தாகம் மக்கள் மத்தியில் மெதுவாகவும் படிப்படியாகவும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வெளிப்படைத்தன்மையற்ற கலாசாரத்தில் நீண்டகாலம் வாழ்ந்த ஒரு சமூகம் மிக படிப்படியாகவே மாற்றமடையும்.

கலாசார ரீதியாக இருந்துவரும் இரகசியத்தன்மைக்கப்பால் எமக்கு சட்ட ரீதியாகவும் பல சமயங்களில் தகவலறியும் உரிமை மறுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. தகவலை வெளிப்படுத்தாமை கட்டளை சட்டமாக இருந்த போது தகவலை வெளிப்படுத்துதல் விலக்களிப்பாக காணப்பட்டது. இந்த பின்னணியிலேயே இத்தகைய சட்டமொன்றை சட்ட புத்தகங்களில் உள்ளடக்கியமை ஒரு பாரிய வெற்றியாகும்.

இங்கிலாந்திலே தகவலறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் காணப்பட்டது. எனினும் இந்தியாவில் வித்தியாசமான வரலாறு உண்டு. கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சமூக அமைப்புக்கள் மாநில மட்டத்தில் வெளிப்படைத் தன்மையின் அவசியம் தொடர்பில் போராட்டங்களில் ஈடுபட்டன.

கிராம அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இந்திய அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்பது தான் இந்திய மக்கள் கேட்ட கேள்வி. இது அரசியல்மட்டத்தில் பல்வேறு அழுத்தங்களை உண்டாக்கியது. இதனையடுத்து மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்ட தகவலறியும் உரிமை சட்டத்தினை 2005ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தேசிய மட்டத்தில் அங்கீகரித்தது.



அத்தகைய சமூக அமைப்புக்களின் நடவடிக்கையொன்று இலங்கையில் தகவலறியும் சட்டத்தின் அவசியம் தொடர்பில் இடம்பெறவில்லை. சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொது நோக்குடைய சட்டத்தரணிகளின் ஆதரவுடன் ஊடகங்களால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் இந்த செயற்பாட்டில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் 3 பெப்ரவரி 2017 இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போதுவரை நாம் அதில் பாரிய வெற்றியை அடைந்துள்ளோம் என என்னால் ஆணித்தரமாக கூறமுடியும்.

சட்டம் நடைமுறைக்கு வந்து 6 மாத காலப்பகுதியில் பல்வேறு வகையான தகவல் கோரிக்கைகள் பொதுமக்களால் பகிரங்க அதிகாரசபைகளுக்கும் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கும் விடுக்கப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளின் எண்ணிக்கை அல்லது அவற்றின் தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை மதிப்பிடும் போது தகவலறியும் உரிமை பொதுமக்களை சென்றடைந்திருக்காவிட்டால் இத்தகைய பாரிய கேள்வி ஏற்பட்டிருக்காது.

அனேக கோரிக்கைகள் பிரதான நகரங்களில் இருந்து முன்வைக்கப்படவில்லை. மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் பொலொன்னறுவை போன்ற பகுதிகளில் இருந்தே அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமங்களில் வாழும் மக்கள் இந்த சட்டம் பற்றி நன்கு அறிந்துள்ளார்கள். சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதுமட்டமல்லாமல் அவர்கள் ஆணைக்குழு முன் தமது கருத்துக்களை திறமையாக முன்வைக்கிறார்கள்.

இதனை ஒரு உதாரணமாக கூறலாம். வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுக்கப்பட்ட தகவல் கோரிக்கையொன்றில் மாத்தறை ஹக்மீமன வீதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பிலான விபரங்கள் கோரப்பட்டது.

உண்மையில் தகவல் கோரிக்கையாளர் ஏன் குறித்த சட்டவிரோத நிர்மாணங்கள் இன்னும் அகற்றப்படவில்லை மற்றும் அவை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் கோரினார். இந்த கோரிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்ட நடவடிக்கை என்ன தெரியுமா? வீதி அபிவிருத்தி அதிகாரசபை அனைத்து சட்டவிரோத நிர்மாணங்களையும் ஒரேயடியாக உடைத்தது.

அதன் பின்னர் குறித்த கோரிக்கையாளர் மிகவும் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டார். அதாவது தான் தகவல் கோரிக்கையை விடுத்த பிறகு ஏன் ஒரு வருட காலத்திற்கு மேலாக இருந்த கட்டிடங்களை திடீரென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அகற்றியது என்பது தொடர்பில் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பிலுள்ள சட்ட அலுவலகர்களுக்கும் மாகாண அலுவலகர்களுக்கும் இடையில் பரிமாறப்பட்ட தகவல் தொடர்பான விபரங்களை கோரினார். இறுதியாக இது தொடர்பில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் அழைப்பாணைக்கு பிறகு வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறித்த கோரிக்கையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் கோரப்பட்ட பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விபரங்களையும் வழங்கியது.

இது ஒரு சிறிய உதாரணம். பாணந்துறை ஹிரண பகுதியில் நிலமொன்றை மீள நிரப்ப வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பான விபரங்களை வெளியிடாமை தொடர்பில் பாணந்துறை மாநகர சபைக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடே ஆணைக்குழுவிற்கு வந்த முதல் மேன்முறையீடாகும்.

இந்த காணி மீள்நிரவுகையானது அப்பகுதியில் வெள்ளத்தை உண்டாக்கியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கபப்ட்டது. எதனை அடிப்படையாக கொண்டு குறித்த காணி மீள் நிரவுகைக்கான அனுமதியை மாநகரசபை வழங்கியதென முறைப்பாட்டாளர் கேட்டிருந்தார். ஆணைக்குழுவின் அழைப்பாணையை அடுத்து பாணந்துறை மாநகரசபை இது தொடர்பான தகவல்களை வழங்கியது.

இந்த உதாரணங்களை பார்க்கும் போது பொதுமக்களால் பொது நலனை கருத்தில் கொண்டு பல்வகைமையான தகவல் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் தகவலறியும் உரிமை சட்டத்தை வினைத்திறனாக பயன்படுத்துகின்றனர் என கூறலாம். இதனை தவிர அரச அதிகாரிகளும் இந்த சட்டத்தை பயன்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கெதிராக அவர்களது நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை இதன்மூலம் அவர்கள் பெற்றுள்ளனர். பொதுமக்கள் இந்த சட்டத்தை தனிப்பட்ட தகவல்களை கோரவும் பொது நலன்சார் தகவல்களை கோரவும் பயன்படுத்தியுள்ளனர்.

வட பகுதியை சார்ந்த ஊடகவியலாளர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் முன்னிலையில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த சட்டம் வடபகுதி ஊடகவியலாளர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை தூண்டியுள்ளது என்றே கூறலாம். தென்பகுதியில் பெற்றோர் தரமொன்றிற்கு பாடசாலையில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பிலான விபரங்களை இந்த சட்டத்தின் கீழ் கோரியுள்ளனர்.

எனவே தகவலறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதான பங்கினை ஊடகங்கள் கொண்டிருந்தாலும் தற்போது பொதுமக்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் பிரதான பங்கை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என கூறலாம். எனவே இந்த சட்டம் தொடர்பில் பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஊடகங்களின் கடமையாகும்.



அவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்த சட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறலாம். இது தொடர்பில் சில சவால்கள் காணப்படுகின்ற போதும் காலப்போக்கில் அவற்றை எம்மால் வெற்றிகொள்ள முடியும் என நம்புகிறோம்.

பகிரங்க அதிகாரசபைகள் மற்றும் தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது, தகவலறியும் உரிமை சட்டம் அரச அதிகாரிகளுக்கு சார்பானது என்ற நிலைப்பாட்டிலேயே ஆணைக்குழு காணப்படுகிறது. உதாரணமாக பொதுமக்களுக்கு தகவலை வழங்கும் தகவல் உத்தியோகத்தருக்கு இச்சட்டம் சட்டரீதியான பாதுகாப்பை வழங்குகின்றது.

உதாரணமாக தகவலை வழங்க முயற்சிக்கும் தகவல் உத்தியோகத்தரின் நடவடிக்கையை தடுத்து அவருக்கெதிராக சிரேஷ்ட அதிகாரியொருவர் நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் தகவல் உத்தியோகத்தருக்கு இந்த சட்டம் பாதுகாப்பை அளிக்கிறது. அத்தகைய சட்ட பாதுகாப்பை பயன்படுத்தி சில தகவல் உத்தியோகத்தர்கள் தகவல் கோரிக்கைகளுக்கான தகவல்களை வழங்கிவருவது சிறப்பம்சமாகும்.

எனினும் தகவலறியும் உரிமை சட்டம் அனைத்துவிதமான தகவலையும் அறியக்கூடிய மார்க்கம் அல்ல. சட்டத்தின் பிரிவு 5 இல் வெளியிடுவதில் இருந்து விலக்களிக்கப்பட்ட தகவல் தொடர்பில் விபரமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தகவல் கோரிக்கையை நிராகரிக்க கூடிய ஒரு மார்க்கமாகவும் இது காணப்படுகிறது. எனினும் விலக்களிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பில் பொதுமக்கள் நலன் அதிகமாக இருப்பின் அத்தகைய தகவலை வெளியிடவும் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் தகவலறியும் உரிமை மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்கள் சட்டத்தில் விலக்களிக்கப்பட்டவைகளுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆயினும் சிறப்புரிமையை வெறுமனே காரணம்காட்ட முடியாது.

அதேநேரம் பொதுமக்கள் நலனே மேன்மையானது. இது மேலும் கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாகும். பாராளுமன்றம் அல்லது மாகாண சபைகள் தமது அமைப்பு ரீதியாக சிறப்புரிமையை காரணம் காட்ட முடியும் எனினும் தனி நபர்கள் அக்குறித்த சிறப்புரிமைகளை காரணம் காட்டி பாதுகாப்பு பெறமுடியாது.

இந்த சிறப்புரிமை தொடர்பான கேள்வி ஆணைக்குழு முன் ஒரு மாகாண சபை தொடர்பில் எழுந்தது. குறித்த தகவல் கோரிக்கை ஒரு ஊடகவியலாளரால் விடுக்கப்பட்டிருந்தது. மாகாண சபையினால் வழங்கப்பட்ட சில நியமனங்கள் தொடர்பிலான தகவலை அவர் கோரியிருந்தார்.

தனிநபர் தொடர்பான விபரங்களை அவர் கோராதபோதும் சிறப்புரிமையை காரணம் காட்டி மாகாண சபை குறித்த கோரிக்கையை நிராகரித்தது. தகவல் உத்தியோகத்தர் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகள் இருவரும் இக்கோரிக்கையை நிராகரிக்க சிறப்புரிமையை காரணம் காட்டியிருந்தனர்.

தகவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்டதையடுத்து ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பிலான காரணங்களை ஆராய்ந்த ஆணைக்குழு குறித்த தகவல் வெளியிடப்பட வேண்டுமென்றும் அதில் சிறப்புரிமையை விட பொதுமக்கள் நலனே அதிகமாக காணப்படுவதாகவும் தீர்ப்பளித்தது.

மேலும் குறித்த நியமனங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பொதுமக்களின் நிதி மூலமே வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியது. இதனால் அத்தகைய தகவலை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளதாக ஆணைக்குழு தீர்மானித்தது.

இதேவேளை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவலையும் சிறப்புரிமையை காரணம்காட்டி நிராகரிக்க பகிரங்க அதிகாரசபை முனைந்தது. எனினும் பொதுமக்களின் நிதியை உபயோகித்து மேற்கொண்ட விஜயங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென ஆணைக்குழு கட்டளையிட்டது. மேலும் கோரப்பட்ட தகவலை வெளியிடுவது எவ்வாறு மாகாண சபையின் செயற்பாடுகளை பாதிக்கும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது.

இது மாகாண சபைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. மாறாக பாராளுமன்றத்திற்கும் பொருந்தும். இத்தகைய சம்பவங்கள் இந்தியாவிற்கும் பொதுவானவை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு ஒரு முக்கிய அடிப்படையினைக் கொண்டே தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அது, நல்ல ஆட்சியில் பொறுப்பு கூறும் தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதாகும். அது எமது நாட்டுக்கும் பொருந்தும்.

இலங்கையின் தகவலறியும் உரிமைக்கான சட்டம் உலகத்தின் சிறந்தவைகளில் ஒன்றாக பட்டியல்படுத்தப்பட இன்னொரு காரணமும் உண்டு. அதாவது இந்த சட்டம் தனியே பகிரங்க அதிகாரசபைகளுக்;கு மாத்திரமன்றி பொதுமக்கள் மற்றும் அரச நிதியை கையாளும் ஏனைய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

பொதுமக்கள் நிதியை கையாளும் ஒரு நிறுவனம் அரச நிறுவனம் அல்லது அரச சார்பற்ற நிறுவனம் என்ற வேறுபாடின்றி சட்ட வரையறைக்குள் உள்ளடங்கும். மேலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் அரசாங்க நிதியை கையாளுமாயின் அந்த சந்தர்ப்பத்திலும் அது இச்சட்ட வரையறைக்குள் உள்ளடங்கும். அரச நிதி என்பது நமது நாட்டு அரசாங்க நிதி மாத்திரமன்றி வெளிநாட்டு அரசாங்க நிதியையும் உள்ளடக்கும்.

உதாரணமாக, பின்லாந்து அரசாங்கம் இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றிற்கு நிதியினை வழங்குகிறது. எனவே அத்தகைய நிதியினை கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவலை கோர நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு.

இது தொடர்பான விடயத்தில் இலங்கையின் தகவலறியும் உரிமை சட்டம் இந்தியாவின் சட்டத்தை விட முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் சட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியினை கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான விபரங்களையே கோர முடியும்.

அரசாங்க அதிகாரிகள் தகவலறியும் உரிமை சட்டத்திற்கு ஆதரவளிப்பார்களா என்பது தொடர்பில் பலருக்கு சந்தேகங்கள் காணப்பட்டன. எனினும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து ஆணைக்குழு முன் கொண்டுவரப்பட்ட மேன்முறையீடுகள் அனைத்திற்கும் சிறப்பான நேர்முறை பிரதிபலன் கிடைத்துள்ளது.



சில அமைச்சுக்கள் மற்றும் மாகாண செயலாளர்களின் பதில்களை பார்க்கும் போது அவை இந்த சட்டத்திற்கு அவர்களது ஆதரவை சுட்டிக் காட்டுகின்றன. எனினும் இதை வைத்துக்கொண்டு அனைத்து தகவல் உத்தியோகத்தர்கள் அல்லது குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகள் ஆகியோர்களும் இச்சட்டத்திற்கு ஏகோபித்த ஆதரவை அளிக்கின்றார்கள் எனக் கூறமுடியாது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பகிரங்க அதிகார சபையினால் தகவல் உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதுடன் அதன் பணி நிறைவடைந்துவிடாது. அந்த நியமனம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் இணையத்தளமொன்றை ஆரம்பித்து அதன் உள்ளடக்கங்களை நிகழ்நிலைப்படுத்துதல் உள்ளிட்ட மேலும் சில நடைமுறைகளையும் பகிரங்க அதிகாரசபை பின்பற்ற வேண்டும்.

சில நிறுவனங்களில் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டாலும் இந்த இரண்டாவது படிமுறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைமையை மேம்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆணைக்குழு இணைந்து செயற்பட்டு வருகிறது.

மேலும் வேண்டுமென்றே தகவலறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்ப்படுத்த பின்னிற்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அந்த சந்தர்ப்பங்களில் குற்றவாளியாக காணப்படும் நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனினும் தற்போது வரை ஆணைக்குழு முன் வந்த அனைத்து பகிரங்க அதிகாரசபைகளும் தமது நேர்முறை தன்மையை சட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ளனர். எனவே சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இதுவரை ஏற்படவில்லை. மேலும் அவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாது என நாம் நம்புகின்றோம்.

இறுதியாக எனது நோக்கின் படி எமது தகவலறியும் உரிமை சட்டம் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. அதன் நோக்கங்களை அடைய சில காலம் எடுக்கும்.

ஆணைக்குழு தகவலறியும் உரிமை ஒரு சட்டம் என்பதற்கு அப்பால் அதன் நடைமுறை நாட்டில் சுமூகமாக இடம்பெற வேண்டும் எனும் நோக்கத்துடனேயே செயற்படுகிறது. இதன்மூலம் மக்கள் நாட்டின் ஆளுகை செயற்பாட்டில் பங்கேற்கும் நிலை மேம்படுத்தப்படும். இது தான் தகவலறியும் உரிமையின் பலமாகும்.

( இந்த நேர்காணலானது லங்காதீப பத்திரிகையின் நிரூபரான பிகுன் மேனக்க கமகே என்பவரால் 30.08.2017 அன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு லங்கா நியூஸ் இணையத்தில் 1 செப்டெம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது.)