வவுனியாவில் புதுவருட தினத்தில் அட்டூழியம்; பசுமாட்டை கொன்ற ஈனர்கள்..!

வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் கட்டையர் குளம் கிராமத்தில் இன்றைய புதுவருட தினத்தில் பசு மாட்டினை இறைச்சிக்காக கொன்று உரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இன்றைய தினம் அதிகாலை வேளை கட்டையர் குளம் பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவரின் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மாட்டினை சுமார் மூன்று நபர்கள் அவிழ்த்துச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.குறித்த வேளை நாய்கள் குரைத்தமையால் வீட்டு உரிமையாளர் வெளியில் வந்து பார்த்த போது பட்டியில் மாட்டினைக் காணவில்லை, எனவே சுதாகரித்துக் கொண்ட உரிமையாளர் காலடித் தடத்தினை பின்பற்றி தேடிச் சென்ற போது அருகில் உள்ள பற்றைக்குள் மாடு அறுக்கும் செயலில் சுமார் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் உரிமையாளரைக் கண்டதும் அவர்கள் பயன்படுத்திய சைக்கிள், கத்திகள் என்பவற்றை விட்டு விட்டு ஓடியுள்ளனர்.குறித்த நபர்களை இனங்கண்ட போதும் இன்றைய தினம் புத்தாண்டு என்பதால் பொலிசார் அசமந்தமாக செயற்படுகின்றனர்.எனவே குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடன் தலையிட்டு நீதியைப் பெற்றுத் தருமாறும் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.