யாழில் மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

யாழ் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்பனா கோவிந்தசாமி என்னும் 38 வயதுடைய ஆசிரியை ஒருவர் மூட நம்பிக்கையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த ஆசிரியைக்கு கடந்த சில நாட்களாக உடல், உள ரீதியான சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு பில்லி சூனியம் ஏற்பட்டதாக தெரிவித்து அவருடைய தந்தையும் ஆசிரியையும் இளவாலை முள்ளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் தங்கி குணமாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டதை அடுத்து போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியையின் உடலை புதைக்குமாறு கூறி, உடல் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.