பாடசாலையின் பெயர் மாற்ற சர்ச்சை; கல்வித் திணைக்களம் விடுத்துள்ள பணிப்புரை..!

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலையின் பெயரில் எந்தவித மாற்றமுமில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறும் பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற முத்திரையை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதாவது இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.



எனினும் அந்தப் பாடசாலையின் அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பதவி முத்திரையைப் பயன்படுத்தி கையொப்பம் இட்டிருந்தமை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.



இந்த நிலையில் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சரியானது என்பதையும் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்று பயன்படுத்துவது தவறென்பதையும் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.