தனுஷின் 5வது 100 கோடிக்கு மேல் வசூலான படமாக அமைந்த ‘வாத்தி’..!

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூலான படங்களை முன்னணி நடிகர்கள் கொடுப்பதென்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஒரு காலத்தில் திருட்டு விசிடி பிரச்சனை, அடுத்து திருட்டு இணையதளங்கள், தற்போது சீக்கிரத்திலேயே ஓடிடி, அதிகமான தியேட்டர் கட்டணம் என மக்கள் தியேட்டர்களுக்கு வருவது முன்பு போல் இல்லை என்பதுதான் பலரது கருத்து.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்களைத் தியேட்டர்களுக்கு வரவழைக்க நல்ல படங்களால் மட்டும்தான் முடியும். இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தேர்வு செய்யும் படங்கள் மீதும், கதாபாத்திரங்கள் மீதும் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.அடுத்தடுத்து இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்து தனது மார்க்கெட் மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறார் தனுஷ். கடந்த வருடம் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ படம், கடந்த மாதம் வெளிவந்த ‘வாத்தி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து 100 கோடியை வசூலித்துள்ளது.தனுஷின் முதல் 100 கோடி படமாக ஹிந்திப் படமான ‘ராஞ்சனா’ அமைந்தது. தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி’ படம்தான் முதல் 100 கோடி படம். அடுத்து ‘அசுரன்’ படம் 100 கோடியைக் கடந்தது. தமிழில் நான்கு 100 கோடி படங்களையும், மொத்தமாக ஐந்து 100 கோடி படங்களையும் கொடுத்துள்ளார் தனுஷ். அவர் அடுத்து நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படம் மீதும், அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள 50வது படம் மீதும் ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு உள்ளது.