கட்சிகளின் செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து உத்தியோகபூர்வ தீர்மானம் அறிவிக்கப்படும்..!

அரசியல் கட்சி செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாக இருந்தாலும், அதற்கு சகல நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆனால், தற்போது அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு சிக்கலாக காணப்படுகிறது. அனைத்து செயற்பாடுகளையும் ஆணைக்குழு அவதானித்து வருகிறது.சுயாதீனம் என்பதற்காக ஆணைக்குழுவினால் தனித்து தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்த சகல தரப்பினரின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை (23) சகல அரசியல் கட்சி செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

அரசியல் கட்சி செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும்.சட்டத்தின் பிரகாரம், தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நிதி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

நிதி வழங்காமல் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என அரச அச்சக திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பை நடத்த வேண்டுமாயின், தபால்மூல வாக்குச் சீட்டுக்களும் எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை.