வவுனியாவில் சிலை அமைக்கும் நடவடிக்கை திலீபன் எம்பியின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தம்..!

வவுனியா நகரில் அனுமதியின்றி இயக்க தலைவர்களுக்கு சிலை அமைக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (19-03-2023) ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் தந்தை செல்வா சிலைக்கு அருகாமையில் முறையான அனுமதி பெறப்பாடாது ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தலைவர் பத்மநாபா அவர்களுடைய சிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவசர அவசரமாக நகரசபையால் நிறுவப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த சிலைக்கு அண்மையில் மேலும் இரண்டு சிலைகளை நிறுவும் நடவடிக்கை அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் இச் சம்பவம் தொடர்பில் உரையாடியிருந்தேன்.

இதனையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் முறையான அனுமதி பெறப்படாது அவர்களது ஆட்சேபனை கடித்தை மீறி இன்றும் புதிய இரு சிலை கட்டுமான நடவடிக்கை இடம்பெற்றதையடுத்து வவுனியா பொலிஸாரிடம் அனுமதி பெறாது சிலை நிறுவியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டையடுத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பொலிஸார் தடை விதித்துள்ளதுடன், அங்கு வேலை செய்தவர்களையும் அனுப்பியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நள்ளிரவுடன் நிறைவு பெறும் நிலையில் வவுனியா மண்ணில் முறையற்ற மற்றும் சட்டவிரோத செயற்பாட்டை தற்போதைய நகரைசபை முன்னெடுத்த நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *