அரச துறை ஊழியர்கள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கான நியாயத் தன்மை குறித்து அமைச்சர் கே.டி. லால்காந்த கேள்வி எழுப்பியுள்ளதோடு, முன்மொழியப்பட்டுள்ள சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு எந்தவொரு நியாயமான அல்லது தர்க்கரீதியான அடிப்படையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தித்வா (Ditwah) பேரிடருக்குப் பின்னரான மத்திய மாகாணத்தின் முன்னேற்றம் குறித்து கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே, ஆட்சேர்ப்பு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் அரச சேவையைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் பதவியிலிருந்த அடுத்தடுத்த அரசாங்கங்கள் அரச துறை ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யவோ அல்லது சம்பளத்தை அதிகரிக்கவோ தவறிவிட்டதாகவும், ஓய்வூதிய முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அரச சேவையைப் பலவீனப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதற்கு மாறாக, தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குள் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தும் அரச சேவையைப் பலப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் கொடுப்பனவுகளுக்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான நிலையில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கான காரணங்கள் என்னவெனக் கேள்வி எழுப்பினார்.
தித்வா பேரிடருக்குப் பின்னரான மீட்புப் பணிகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த லால்காந்த, ஏற்பட்ட அழிவின் அளவைக் கருத்திற்கொள்ளும்போது சுமார் ஒரு வருட காலத்திற்குள் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது எனக் கூறினார்.
ஜனாதிபதியின் உடனடித் தலையீடும், பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் தொடர்ச்சியாகப் பங்கேற்றமையும் அரச அதிகாரிகளுக்கும் அரசியல் அதிகாரிகளுக்கும் கணிசமான ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் உறுதியுடன் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், மீட்புச் செயற்பாடுகளில் பிரதமரின் தலையீடும் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கட்டான சூழ்நிலைகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்ட மக்களைப் பாராட்டிய அவர், மீட்புப் பணிகளின் போது அரச ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பு விசேடமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Recent Comments