Sunday, November 29, 2026
Huisதாயகம்நாளை பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பிரதமர்

நாளை பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் – பிரதமர்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை (30) வழமைபோல் இயங்கும் எனவும், மூன்றாம் தவணைப் பரீட்சை நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

நாளைய பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிராகரித்த அவர், பரீட்சைகளை நடத்துவது அல்லது ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானங்களைக் கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் அல்லது மாகாணக் கல்வி அதிகாரிகள் மாத்திரமே எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

பரீட்சை நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்பதைக் கல்வி அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வழமைபோல் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது தீர்மானம் பிள்ளைகளின் கல்வியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துச் சிந்திக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

“பிள்ளைகளின் கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது சரியானதா என்பதை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும் அதிபர்களும் நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும், பிள்ளைகளின் கல்வியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களும் அதிபர்களும் கடமைக்குச் சமூகமளிப்பார்கள் எனத் தான் நம்புவதாக கலாநிதி அமரசூரிய குறிப்பிட்டார்.

தித்வா (Ditwa) பேரிடருக்குப் பின்னரான மத்திய மாகாணத்தின் முன்னேற்றம் குறித்து கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

2024 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, பாடசாலைகளின் வழமையான நேர அட்டவணைகளை மீள நிலைநிறுத்தவும், பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்தி பெறுபேறுகளை விரைவாக வெளியிடவும் அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், பல வருடங்களின் பின்னர் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, முறையான பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களை மையப்படுத்திய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறையை உருவாக்கும் நோக்கில், தரம் 2 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டங்கள் 2027 ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனைய அரச துறை ஊழியர்களின் சம்பளத்துடன் இணைந்து ஆசிரியர்களின் சம்பளமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும், மற்றுமொரு சம்பள அதிகரிப்பு 2027 ஜனவரி மாதத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் கலாநிதி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் கூறினார்.

தொழிற் சங்கங்களுக்குத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்ட அவர், தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கத் தவறிய நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கும், தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கும் இடையே வேறுபாடு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!