முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிய ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு ஒளிப்படக் கலையகமும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இயங்குநிலையில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு ஒளிப்படக் கலையகத்தை மீள இயங்கச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை பரந்த புவியியல் வீச்சைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மேலதிக கலையகங்களுக்கும் அங்கீகாரம் வழங்கி, முல்லைத்தீவு சமத்துவ நிலையோடு அணுகப்படுவதை உறுதிப்படுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டிற்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் 28.11.2026நேற்று பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணச் சேவைகளுக்கு 3.1 பில்லியன் ரூபாயும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முறைமைகளை மேம்படுத்த 750 மில்லியன் ரூபாயும் மதிப்பிடப்பட்டுள்ளன.
25 மாவட்டங்கள் உள்ள இலங்கையில், மொத்தம் 1420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு ஒளிப்படக்கலையங்கள் உள்ளன. அவற்றுள் முல்லைத்தீவின், ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு ஒளிப்படக் கலையகமும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகச் சேவை வழங்கவில்லை.
இது தொடர்பில் குறித்த கலையகத்தினர், அங்கீகரிக்கப்பட்ட ஒளிப்படக்கலையகங்களை அதிகரிக்கக்கோரி முல்லை மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவுச் சங்கம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் என்பன குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எழுத்துமூலக் கோரிக்கை விடுத்தும் இதுவரை அக்கோரிக்கைகளுக்கான பதில் கிடைக்கப்பெறவில்லை.
அதன் பின்னர், படப்பிடிப்பாளர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 2026 யூலை 31 அன்று எழுத்துமூலம் கோரினேன். தொடர் நடவடிக்கையாக ஓகத்து 17 அன்று அமைச்சிலிருந்து கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டும் கூட இன்னமும் அச்சேவை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை.
கௌரவ தவிசாளர் அவர்களே!
சமகால நிலைமையின் படி, ஒவ்வொரு துறையிலும் தீவளாவிய சமத்துவ நிலைக்கு சவாலாகும் வகையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய வளநிலைகள் காணப்படுகின்றன.
கடவுச்சீட்டுக்கான புகைப்படம் எடுப்பதற்கான சேவை வழங்கலில் முல்லைத்தீவில் தற்போது சேவை வழங்கத் தக்க நிலையில் ஒரு சேவை நிலையம் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லை என்றால் முல்லைத்தீவு மக்கள் சமத்துவ நிலையிலான சேவை வழங்கலில் எந்த அளவுக்கு மிகவும் பின்னடைவாக அரச கட்டமைப்புகளால் நடாத்தப் படுகின்றனர் என கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பரந்த புவியியல் வீச்சைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் போதுமான கலையகங்களின் உள்ளீர்ப்பை 2027இன் தொடக்கத்தில் ஏற்படுத்தி உங்கள் அமைச்சில் முல்லைத்தீவு சமத்துவ நிலையோடு அணுகப்படுவதை உறுதிப் படுத்துங்கள். மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்து, தகுதிவாய்ந்த மேலதிக கலையகங்களுக்கும் அங்கீகாரம் வழங்குங்கள்.
இறுதியாக, வன்னியில் குடிமக்கள்(சிவில்) பாதுகாப்புப் பணியாளர்களை (CSD) பேரிடர் மீட்பிலும் மக்கள் மய அவசர உதவியிலும் வினைத்திறனாக ஈடுபடுத்துங்கள்.
ஒட்டுசுட்டான் போதைப்பொருள் மீட்புக்கான புனர்வாழ்வளித்தல் சிகிச்சை, காவல் நிலைய இடமாற்றம், கடவுச்சீட்டு ஒளிப்படச் சேவை ஆகிய மூன்று விடயங்களிலும் பொறுப்பான நிறுவனத்தையும் நிறைவேற்றும் திகதியையும் இச்சபையில் அறிவிக்குமாறு மீண்டும் கௌரவ அமைச்சரைக் கோரி எனது உரையை நிறைவு செய்கின்றேன் – என்றார்.


Recent Comments