மது போதையில் வாகனம் செலுத்திய காவல்துறை உத்தியோகத்தர்..!

மீகொட- ஆட்டிகல வீதியில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிவரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மதுபோதையில் செலுத்திய வாகனம் முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காரில் பயணித்த ஒன்றரை வயது மகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.விபத்தின் பின்னர், காயமடைந்த தந்தையும் 8 வயது மகளும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், பலத்த காயமடைந்த ஒன்றரை வயது மகளும் தாயும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒன்றரை வயது மகளின் தலையில் எட்டு தையல்கள் போடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டுக்கு தேவையான உடைகள் மற்றும் உணவு பானங்களுடன் தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி இவ்வாறு கார் மீது மோதியது.விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபான விருந்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.