வவுனியாவில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு: பணம், நகை கொள்ளை..!

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் தாயும், எட்டு மாத கர்ப்பிணியான அவரது மகளும் புத்தாண்டு தினத்தன்று (14.04) உந்துருளியில் வவுனியா நகரில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்றுள்ளனர்.இரவு 8.30 மணியளவில் பம்பைமடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கும், பம்பைமடு இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சிறிய பற்றைக் காட்டுக்குள் இருந்து முகத்தினை துண்டுகளால் மூடி கட்டியவாறு வந்த மூவர் குறித்த உந்துருளியை வழிமறித்து அவர்கள் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 6 அரைப் பவுண் நகைகளை கொள்ளையடித்துள்ளதுடன், அவர்களது பையில் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தொலைபேசிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் 8 மாத கர்ப்பிணி பெண் ஆகிய இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *