பாடசாலை வளாகத்தினுள் மாணவனின் கைபேசியை அதிபர் பறித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

பாடசாலை வளாகத்தினுள் மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் தவறான முடிவெடுத்து நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும் அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் கூறப்படுகின்றது.



அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன், தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் காவல் நிலையத்தில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

இவ் முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் காவல் துறையினர் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையிலேயே அவமானத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை கொரோனாவுக்குப் பின்னராக காலத்தில் தமிழர் பிரதேசங்களில் மாணவர்கள் மத்தியில் தொலைபேசிப் பாவனைகள் அதிகரித்துள்ளதுடன் போதைப்பொருள் பாவனை, காதல், முறை தவறிய பாலியல் தொடர்புகள், துஸ்பிரயோகங்கள் என்பன அதிகரித்துள்ளது.



இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களே, பெற்றோர்களின் கண்டிப்பு, கண்காணிப்பு என்பன தொடர்ச்சியாக இன்மையாலும், பிள்ளைகள் கூறுவதை அறிவு பூர்வமாக பெற்றோர்கள் சிந்திக்காது நம்புவதாலும் இத்தகைய சீரழிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.