நுகர்வோர் அதிகார சபை உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் – நால்வர் கைது

நாரம்மல பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அலுவலக அதிகாரிகள் குழுவை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் வியாழக்கிழமை (04) கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதல் தொடர்பில் கால்நடை பண்ணையின் உரிமையாளர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நாரம்மல பிரதேசத்தில் உள்ள கால்நடை பண்ணை ஒன்றில் பாரிய அளவிலான முட்டை இருப்புகளை தம்வசம் வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அலுவலக அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் சோதனைக்கு சென்றுள்ளது.இதனை தடுக்கும் வகையில் அங்கிருந்த சிலர் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளை தாக்கியதில் 5 அதிகாரிகள் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.