யாழில் குடும்பஸ்தரை கொடூரமாகத் தாக்க ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பணம்..!

நெல்லியடி, அத்தாய் பகுதியில் ஒருவரை வாள், கோடாரி, கொட்டன்களால் தாக்கி வீடியோ எடுத்து, ரிக்ரொக்கில் பதிவிட்ட 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த இந்த கும்பல், நேற்று காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அத்தாய் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே தாக்கப்பட்டார்.



அந்த பகுதியில் வன்முறை குழுக்கள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. முன்பகையை காரணமாக கூறப்படுகின்றது. இந்த சம்பவமும் முன்பகை அடிப்படையிலேயே நடந்துள்ளது.

நபர் ஒருவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு லிசாரணையில் முன்னிலையாக சென்ற போதே, வன்முறை கும்பல் அவரை வழிமறித்து தாக்குதல் நடந்தியது.

அவரை அடித்து விழுத்தி, கத்தி மற்றும் கோடாரியால் வெட்டியதுடன், கொட்டனால் அடித்துமுள்ளனர். இதை ஒருவர் வீடியோ எடுத்தார்.

காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



தாக்குதல் பற்றி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தாக்குதலாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 3 பேர் அத்தாய் பகுதியை சேர்ந்தவர்கள். 6 பேர் இராஜ கிராமத்தை சேர்ந்தவர்கள். 18- 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.



தாக்கப்பட்டவருக்கும், ஜேர்மனியில் உள்ள ஒருவருக்குமிடையில் முன்பகை உள்ளதாகவும், ஜேர்மனி நபர் அனுப்பிய பணத்துக்காக தாக்குதல் நடத்தியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

கைதான ஒருவரின் கையடக்க தொலைபேசியில், தாக்குதல் சம்பவம் பற்றிய வீடியோ காணப்பட்டது. அதை ரிக்ரொக்கிலும் பதிவிட்டுள்ளார்.