இலங்கையின் அரசியலில் 76 வருடங்களுக்கு மேல் காணப்பட்ட குடும்ப அரசியலை மக்களின் ஒற்றுமையுடன் உடைத்து ஆட்சியமைத்த வரலாற்று சாதனையை தேசிய மக்கள் சக்தி படைத்திருந்தது.
கடந்தகால அரசியலின் மீதான மக்களின் வெறுப்பை தனக்கு சாதகமாக பயன்ப்படுத்தி ஆட்சியமைத்த கட்சி என்று கூறினாலும் தவறில்லை.
இந்த வெற்றி, உள்நாட்டு அரசியலையும் தாண்டி சர்வதேச அரசியலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாக பேசப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் இங்கு மக்களின் எதிர்ப்பார்ப்பு என்பது அளவு கடந்ததாகவே காணப்பட்டது.
காரணம், கடந்த கால ஊழல் மோசடிகளை வெளிக் கொண்டு வருவதாகவும் மற்றும் மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து வெளிக்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் மீதான மக்களின் நம்பிக்கை உச்சம் பெற்றிருந்தது.
ஆனால், மக்கள் பிரச்சனை மீதான ஈடுபாட்டையும் தாண்டி கட்சிக்குள்ளான சிக்கல்கள் என்பது தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
அண்மையிலும் அரசியல்வாதிகளின் கல்வித்தகைமை குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கணிசமான ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்திருந்தார்.
அமைச்சர்களின் அழுத்தங்களால் ஓரிரு மாதங்களுக்குள் ஆறு நிறுவனத் தலைவர்கள் பதவி விலகியுள்ள நிலையில் தற்போதுள்ள 159 ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானோர் இவ்வாண்டுக்குள் நிச்சயம் பதவி விலகுவார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் அரசியல் வட்டாரத்தில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதுடன், வாக்களித்த மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Recent Comments