கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் குறித்த நபர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போது ஆரம்பத்தில் இரண்டு சிறுவர்கள் மூலமே விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் இவ்வாறு சீண்டலுக்கு உள்ளானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சின் செயலாளரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் மற்றும் தமது கதிரைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுவதால் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதாலேயே இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.
எனவே தாபனவிதிக்கோவை மற்றும் தனது நியமன கடமைகளை சரிவர மேற்கொள்ளத் தவறிய வடக்கு மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் தனது தவறுகளை ஏற்று பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய செயலாளரை பதவி நீக்க அல்லது உடன் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


Recent Comments