ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விநயமாக கோருவதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் க குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
35சபைகளில் நாம் தனிப்பெரும் கட்சியாக உறுப்பினர்களை பெற்றுள்ளோம். ஆறு சபைகளில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த சபைகளில் தவிசாளர் உப தவிசாளரை தெரிவு செய்யும் பொறுப்பு கட்சிக்கு மட்டுமே இருக்கும். எமக்காக வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது. நாம் பொறுப்பெடுக்கும் சபைகளை திறமையுடனும் நேர்மையுடனும் நிர்வகிப்போம்.
ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக் கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த வகையில் இந்த 35 சபைகளுக்குமான தவிசாளர் உபதவிசாளர்களை நாங்கள் முன்னிறுத்துவோம். மற்றய கட்சிகள் இந்த பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி நாம் முன்னிறுத்துகின்ற வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று தன்மையாக கேட்டுக் கொள்கிறோம்.
சில சபைகளில் விதிவிலக்கு ஏதும் இருந்தால் அது தொடர்பில் ஆராய்வோம். பொதுவான வகையில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். யாழ் மாநகரசபைக்கும் இது பொருந்தும். விசேடமாக நாங்கள் கேட்டுக் கொள்வது தமிழ் கட்சிகளையே. அந்த கட்சிகள் இந்த உடன்பாட்டிற்கு வருவது நல்லது என்பது எமது விநயமான வேண்டுகோள். முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்பேசும் கட்சிகளோடும் நாம் இணங்கியே செயற்படுவோம்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை இந்த தேர்தலில் நாம் விமர்சித்ததாக எனக்கு நினைவில்லை. அவர்களும் எங்களை விமர்சித்ததாக ஞாபகமில்லை. சில கட்சிகள் எங்கள் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கும் போது அதற்கான பதில்களையே வழங்கியிருந்தோம். தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான கூட்டு தொடர்வது நல்லது என்பது எமது சிந்தனை. காலப்போக்கில் அதனை தீர்மானிப்போம்.எனவே இந்த முயற்சி அப்படியான ஒரு போக்கிற்கும் வழிவகுக்கலாம்.
வவுனியாவில் எமது கட்சி பின்னடைந்துள்ளது என்று கூறுவது ஒரு மாயை. கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட இந்த தேர்தலில் வவுனியாவில் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளது. அது பின்னடைவு அல்ல. திடீர் என்று வானைத் தொட முடியாது. நாங்கள் சீலிங்கை தொட்டு விட்டோம் இனி மேலே போவோம் என்றார்.


Recent Comments