ஆசிரியர் சேவையின் தரம் 3 க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பதில் செயலாளர் எ. அன்ரன் யோகநாயகம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை யின் 3ம் வகுப்பு – 1(அ) தரப் பதவிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த 20ம் திகதி கோரப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு, இவ் ஆசிரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதில் செயலாளர் எ.அன்ரன் யோக நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பிரிவு நியமனம் பெற்ற பலர் அதிபர், வலய பணிப்பாளர்களின் செல்லப் பிள்ளைகளாக செயற்பட்டு கணக்காய்வு நியதிகளை முழுமையாகப் புறந்தள்ளி சட்ட விரோதமாக இடை நிலை வகுப்புக்களுக்கு கற்பித்து வருகின்றனர், அதுபோல் உயர்தர கலைப் பிரிவு நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் ஆரம்ப, இடை நிலை வகுப்புக்களில் பொருத்தமான பாடவேளைகள் இன்றி கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் உரிய வகையில் ஆசிரியர் வெற்றிடம் மதிப்பீடு செய்யப்படாது இவ் நியமனம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வடக்கு ஆளுநரின் இத்தகைய முடிவு வரவேற்கத்தக்கது.
Recent Comments