கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி கட்டமைப்பு” செயலிழந்துள்ளது.
இன்று (20) பிற்பகல் 01.45 மணி முதல் குறித்த கணினி கட்டமைப்பு செயலிழந்த நிலையில், மாலை 4.15 மணியளவில் அதன் செயற்பாடு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள இந்த கணினி அமைப்பு கடந்த 08 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல முறை இவ்வாறு செயலிழப்பதாகவும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இந்த அமைப்பு மெதுவாகச் செயல்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இதுபோன்ற பலவீனமான கணினி அமைப்புக்குப் பதிலாக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் கணினி அமைப்பின் தேவையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி கட்டமைப்புகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments