Monday, October 27, 2025
Huisதாயகம்வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய யாழ் மகளிர் கல்லூரி..!

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய யாழ் மகளிர் கல்லூரி..!

பிள்ளைகளுக்கு நீதியை நேர்மையை நடுநிலையை போதிக்க வேண்டிய கல்வி அதிகாரிகள் ஏதும் அறியாத பிள்ளைகளின் திறமைகளில் விளையாடிய நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தக்க பாடத்தை புகட்டியுள்ளது.

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக வடக்கு மாகாண உயர் நீதிமன்றத்தால் வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு செலவினை செலுத்த வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டியில் சங்கீத போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன் ஹாட்லி கல்லூரி முதல் இடத்தினை பெற்றுக் கொண்டதாகவும் நடுவர் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டபடி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் பாடிய பாடலில் பதவர்ணம் காணப்படாததால் குறித்த போட்டியில் இருந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து தமக்கு முதல் இடம் தரப்படல் வேண்டும் என்று வேம்படி மகளிர் கல்லூரி அதிபரால் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது .

எனினும் போட்டி மேன்முறையீட்டு சபையால் குறித்த மேன்முறையீடு எவ்வித நடுநிலையான விசாரணைகளும் இன்றி நிராகரிக்கப்பட்டது.

ஹாட்லி கல்லூரி சார்பாக பங்குபற்றிய அணியில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கடமை புரியும் இரண்டு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களின் பிள்ளைகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் பிள்ளை பங்கு பற்றியமையால் தான் இவ்வாறான பக்கச் சார்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கிய நாள் முதலே தமது பிழைகளை மறைக்க பல முயற்சிகளை மாகாணக் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

எனினும் சட்டத்தரணிகள் வாதத்தால் நீதிமன்றம் மாகாணக் கல்வி அதிகாரிகளின் செயற்பாடுகள் பக்கசார்பாக காணப்படுவதாக தனது தீர்ப்பில் கூறியதுடன் இனிவரும் காலங்களில் மாணவர் சார்பாக நடைபெறும் எந்த போட்டி நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பணியாற்ற கூடாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததுடன் வழக்கு செலவு யாவும் இவர்களால் செலுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மேற்படி விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் போட்டிகளில் பக்கசார்பான தீர்மானங்களை மேற்கொள்வது தடைசெய்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

மேலும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற அதிகாரிகளுக்கு எதிராக அரச நிர்வாக விதிகளுக்கு அமைய தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!