மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும், பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும், சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் எச்சரித்துள்ளார்.
மன்னார் போராட்டக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று புதன்கிழமை (24) 53 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான தனது செய்தியை அனுப்பி உள்ளார்.
மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்த தேவையில்லை. அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ளார்.
எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை. பல முறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும், ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும், எங்களுடைய கருத்துக்களையும் முன் வைத்தோம்.
எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை மன வேதனையை நம்பியிருந்த எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வது எமது உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம். எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும். மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது.
நாங்கள் சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது.
இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும்,எமது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படும்.
கவலைக்குரிய விடயம் என்ன என்றால் எமது மன்னார் மாவட்டச் செயலகம், அரச அதிபர் மற்றும் அவருடன் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுடைய செயற்பாடுகள் எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது.
குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க் கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை ஒருவரை அனுப்பி இக்கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளோம். மிகவும் வேதனையான விடயமாக அமைந்துள்ளது.
கடந்த 40 நாட்களாக இடம் பெற்ற வேலைத் திட்டங்களை மாவட்டச் செயலகம் கண்காணிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மாவட்டச் செயலகமும், அதிகாரிகளும் இத்திட்டங்களுடன் ஒத்துப் போகின்றார்களா?என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. எமது மக்களை அழிக்கும், மக்களின் வாழ்விடங்கள் பறிக்கின்ற, இத்தீவை இல்லாது செய்கின்ற செயற்பாடுகளுடன் அதிகாரிகள் அனைவரும் இணைந்து போகின்றார்களா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (29) மன்னாரில் மாவட்ட தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது சக்தியை இந்த அரசுக்கு காண்பிக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


Recent Comments