திருகோணமலை – சேருநுவர பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப் பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று (2) திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன.
இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர – தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது.
வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார்.
Recent Comments