Saturday, October 25, 2025
Huisதாயகம்வட மாகாண முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில்; ஆதரவை வழங்குமாறு ஆளுநர் கோரிக்கை..!

வட மாகாண முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில்; ஆதரவை வழங்குமாறு ஆளுநர் கோரிக்கை..!

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.10.2025) கலந்துரையாடல் நடைபெற்றது.



கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் த மனேஜ்ட்மன்ட் க்ளப் வடக்குக்கான முதலீட்டாளர் மாநாட்டை ஒழுங்குபடுத்துகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், தொழில்துறை அமைச்சகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் இந்த மாநாட்டை முன்னெடுப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



மாநாட்டுக்குத் தேவையான எமது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக, எமது மாகாணத்தை மேம்படுத்த முடியும்.

உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு எமது மாகாணம் 4.2 சதவீதமே பங்களிப்புச் செய்கின்றது. அதனை ஆகக் குறைந்தது 10 சதவீதமாகவேனும் உயர்த்த வேண்டும். அதற்கு இவ்வாறான முதலீட்டாளர் மாநாடுகளும் அதன் ஊடாக எமது மாகாணத்தை நோக்கி முதலீட்டாளர்களும் வரவேண்டும்.



முதலீட்டாளர்கள் இங்கு வருகின்ற போது அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை அரசாங்க அதிகாரிகள் வழங்கவேண்டும். அதேநேரம், மக்களும் முதலீடுகளை எதிர்க்காமல் அந்த முதலீடுகள் ஊடாக எமக்குத் தேவையானவற்றை பேரம்பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!