Saturday, October 25, 2025
Huisதாயகம்வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விரைவு கணித போட்டியில் முறைகேடு..!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விரைவு கணித போட்டியில் முறைகேடு..!

09/10/2025 அன்று நடைபெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்டத்திலான விரைவு கணிதப் போட்டியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அதனை உரிய முறையில் அறிவித்த போதும் வலயக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் இதனால் சிறுமி ஒருவர் கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தரம் 04 விரைவு கணித போட்டியில் பங்கு பற்றிய போது குறித்த ஒரு மாணவிக்கு மட்டும் தரம் 02 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்களின் பின் வினாத்தாள் பெறப்பட்டு தரம் 04 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. பின் மூன்றாவது தடவையாகவும் வேறொரு வினாத்தாள் வழங்கப்பட்டு போட்டி நடைபெற்றுள்ளது.



மேற்படி விடயங்கள் காரணமாக குறித்த மாணவி மன அழுத்தத்திற்கு உள்ளாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபர் ஊடாக 13/10/2025 அன்று எழுத்து மூலம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்திருந்தும் இன்று வரை எதுவிதமான பதிலும் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் 31/10/2025 அன்று மாகாண மட்ட விரைவு கணிதப் போட்டி நடைபெற உள்ளது.

குறித்த மாணவி சென்ற வருடம் தரம் 03 விரைவு கணிதப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன், இவ்வருடம் நடைபெற்ற கோட்ட மட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



வட மாகாண கல்விப் புலத்திலுள்ள உரிய அதிகாரிகள் மாணவியின் கல்வி உரிமை பாதிப்படையாத வண்ணம் உடனடியாக விசாரணை ஒன்றை நடாத்தி குறித்த மாணவிக்கு நிவாரணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் செயற்பாடுகள் மாணவர்கள் சார்பாக நடைபெறாமல் இருப்பதை மேற்படி விடயம் நிரூபணமாக்கியுள்ளது. இது மட்டுமின்றி வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே செல்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிலும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் அதிக கவனத்தை செலுத்தும் இலங்கை ஆசிரியர் சங்கமானது மேற்படி மாணவியின் விடயத்தில் அதிக கரிசனை கொண்டுள்ளதுடன், மாணவியின் கல்வி உரிமையைப் பாதுகாக்க எப்போதும் முன்னிற்கும் என்பதை தெரியப்படுத்துகின்றோம் எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!