இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,677 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் 6,296 முறைப்பாடுகளும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத 1,381 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாதத்தில் மாத்திரம் 1,176 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 49 முறைப்பாடுகள் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புடையவை, 111 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர் முறைமை தொடர்பாகவும், 203 முறைப்பாடுகள் பிச்சை எடுத்தலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தொடர்பாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத ஏனைய முறைப்பாடுகளில், இளவயது கர்ப்பம் தரித்தல் தொடர்பான 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அது தவிர, சிறுவர்களுக்கு எதிரான இணையத்தள துன்புறுத்தல் தொடர்பான 102 முறைப்பாடுகளும், வீட்டு வன்முறை தொடர்பான 38 முறைப்பாடுகளும், தற்கொலை முயற்சி தொடர்பான 13 முறைப்பாடுகளும், கருக்கலைப்பு தொடர்பான ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 83 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் 27 முறைப்பாடுகளும், 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வது தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்கள் அடிமையாகும் போக்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.


Recent Comments