Saturday, January 24, 2026
Huisதாயகம்வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு..!

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு..!

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவை செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க் கிழமை காலை (28.10.2025) நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

தேசிய மட்டத்தில் சாதித்த வீரர்களை ஊக்குவிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் ஏனையோரையும் சாதிக்கத் தூண்ட முடியும். அதேபோல தேசிய மட்டத்தில் சாதிக்கும் மாணவர்களின் பாடசாலைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.



கடந்த சில ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடான கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் என்பது பெருமளவில் இடம்பெறவில்லை.

இந்த விடயத்தில் மாகாண விளையாட்டுத் திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தி, பிரதேச மட்ட கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தந்த மாவட்டச் செயலர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி என்பனவற்றுடன் தமது பணி முடிந்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக பிரதேச விளையாட்டுக் கழகங்களை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துக் கலந்துரையாடுவதுடன் விட்டு விடுகின்றனர்.

அந்தக் கழகங்களை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் செயலாற்றுவதில்லை. விளையாட்டு உத்தியோகத்தர்கள் களத்தில் எப்படி பணியாற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவதுடன் அவர்களின் வினைத்திறனின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என ஆளுநர் குறிப்பிட்டார்.

தேசிய மட்டப் போட்டிகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கான போக்குவரத்து வசதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மாகாண அமைச்சுக்களிலுள்ள பேருந்துகளை அவற்றுக்குப் பயன்படுத்துமாறு ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு பாடசாலையைத் தெரிவு செய்து அங்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்குவதற்கான பொறிமுறை உருவாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



ஏற்கனவே வலய ரீதியான ஒவ்வொரு பாடசாலை மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை மாகாண நிதியில் புனரமைப்புச் செய்து பராமரிப்பதற்கான ஒழுங்குகள் திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை மாகாண மட்ட போட்டிகள் முடிவடைந்த பின்னரே தேசிய மட்டத்துக்கான வீரர்களை அடையாளப்படுத்தி தயார் படுத்தல்கள் நடைபெறுவதால் அவர்களுக்குரிய போதுமான பயிற்சிகள் வழங்கப்படாமல் தேசிய ரீதியில் சாதிக்க முடிவதில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் கோட்ட மட்ட போட்டி முடிவுகளின் அடிப்படையில் தேசியத்துக்கு தகுதி பெறக் கூடியவர்கள் எனக் கருதும் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு தொடர் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்;டச்சத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான கோரிக்கையும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

பாடசாலைகளில் விளையாட்டு வாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும், பாடசாலைகளின் மைதானத் துப்புரவு வேலைத்திட்டத்தை மாகாண ரீதியில் ஒரே காலப் பகுதியில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் போசாக்கற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றமை தடை செய்யும் சுற்றறிக்கையை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

இதேநேரம், முதல்தர அணிகளை மாத்திரம் வளர்த்தெடுக்காமல் இரண்டாம் நிலை அணிகளை வளர்த்தெடுப்பதற்கான யோசனையும் விளையாட்டு உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக அதிகளவான விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.

பாடசாலைகளில் சிறப்பாகச் செயற்படும் விளையாட்டு வீரர்களை தொடர் பயிற்சிக்கு அனுமதிப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக் காட்டப்பட்டது. அந்த மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களால் இவ்வாறு தடை ஏற்படுத்தப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டது.

விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களை குழுவாக்கி அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதன் ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார்.



மேலும், பாடசாலைகளிலுள்ள விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஆண்டுக்கான விளையாட்டு நாட்காட்டியை அனைவரும் இணைந்து தயாரிப்பதன் ஊடாக பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடியும் என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மாகாணத்தின் விளையாட்டு அபிவிருத்திக்கான திட்டத்தை முன்வைக்குமாறும் மாகாணப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், விளையாட்டுத்துறை மாகாணப் பணிப்பாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!